Tuesday, December 3, 2013

விடியும்முன் - இது விமர்சனமல்ல ஆனால்? (திரைப்படம் கலையா? வணிகமா? அல்லது கலை சார்ந்த வணிகமா?)


சமீபத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்திற்கு பிறகு திரையரங்கின் திரைக்குள் என்னை முழுமையாக உள்ளிழுத்த திரைப்படமிது. என்னுடைய திரைப்படம் சார்ந்த கருத்துக்கள், மற்றும் ரசனை என்பது, என்னுடைய இத்தனை வருட வாழ்வியல் சார்ந்த அனுபவம், வாசிப்பு மற்றும் கடந்து வந்த மனிதர்கள், இவற்றை சார்ந்தே தோன்றுவன என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. அந்த வகையில் விடியும் முன் திரைப்படம் என்னனை முழுமையாக வசீகரித்தது.

தற்போதைய சூழலுடன் ஒப்பிட்டு பார்த்தால், இப்பொழுது வெளியாகும் திரைப்படங்களில் அடிப்படையாக இருக்கும், தவிர்க்கவே முடியாது என்று சொல்லப்படும், கதாநாயகன், கதாநாயகி, காதல், காமெடி, கனவுபாட்டு, பிரம்மாண்ட சண்டைகாட்சிகள், குத்துப்பாட்டு என்ற வரிசையான சினிமா இலக்கணங்கள் எதுவும் இல்லாமலேயே ஒரு அட்டகாசமான கிரைம் திரில்லரை தரமுடியும் என்று, ஆணித்தரமாக நீருபித்திருக்கும் திரைப்படம். என்னளவில், எந்த ஒரு திரைப்படத்தை பற்றிய கருத்தோ விமர்சனமோ எழுதும் பட்சத்தில், அத்திரைப்படத்தின் கதையை பற்றி முழுமையாகவோ அல்லது அரைகுறையாகவோ எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை, அதனால் இப்படத்தின் கதையை தவிர்க்கிறேன்.

இப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஓன்று, இதன் படத்தொகுப்பு சமீபத்திய டிரண்ட் என்று கொண்டாடப்படும், திரையில் அரை நொடிக்கொருமறை சடார் சடாரேன மாறிக்கொண்டே இருக்கும் காட்சிகள் போல் அல்லாமல், ஒவ்வொரு காட்சியும் அதன் அதனுடைய நிதானத்துடன், ஆனால் அதன் வீரியம் குறையாமல் நகர்வது தான் இப்படத்தின் பலம். ஆனால் இணையத்தில் சில நண்பர்களின் விமர்சனத்தில் கூட அதை குறையாக குறிப்பிட்டிருப்பதை கவனித்தேன். எல்லாவற்றையுமே அவசரமாக அடையத்துடிக்கும் மனநிலையில் வாழ பழகிய பிறகு இந்த நிதானம் கண்டிப்பாக சிலரை எரிச்சடையவே வைக்கும். ஆனால் இத்திரைப்படத்தின் அந்த நிதானம் தான் அழகே. இப்படத்தின் இறுதி காட்சி கூட சினிமாட்டிக்காக உள்ளது என்று பரவலாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் அது தான் இத்திரைப்படத்தின் பலமே. படம் முழுவதும் வியாபித்திருக்கும் இருள் சூழ்ந்த சமுகத்தின் குருர பக்கங்களுக்கு நடுவில், எங்கேயெனும் ஒரு மூளையில் இருந்து கண்டிப்பாக ஓர் வெளிச்சம் வந்தே தீரும், நீ தொடர்ந்து போராடினால் என்று, சொல்வதாகவே இப்படத்தின் இறுதி காட்சியை பார்க்கிறேன்.

கடைசியாக முற்காலத்தில் பல ராஜ்ஜியங்கள் அழிந்ததே பெண்ணாசையால் தான் என்று சொல்வார்கள். இதற்கு ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் விதி விலகல்ல. ஆனால் இன்றைய சூழலலில் அந்த இடத்தை மனிதனால் உருவாக்கபட்ட பணம் ஆக்கிரமித்துவிட்டது. அதை இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் நமக்கு உணர்த்தியபடியே நகர்கிறது. சலூனில் முகச்சவரம் செய்து கொண்டிருக்கும் பெண் சொல்லும் பாக்கெட் மணிக்காக, சலூ£ன்காரன் ரேகாவிடம் சொல்லும் இந்த வேலையை மட்டும் முடிச்சால் நல்ல பணத்துடன் செட்டிலாகிவிடலாம் என்பதாக, தன்னிடம் ஆதீத பணம் இருப்பதால், அந்த பணத்தை கொண்டே தன் மன வக்கிரங்களை நிறைவேற்ற துடிக்கும் பெரியைய்யா. இப்படி படம் முழுவதும் பணத்தாசையின் கோரமுகத்தை அது எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை பொட்டில் அடித்தார்போல் சொல்கிறது. ஒரு வேலை பெரியைய்யா ஒரு வேளை சோற்றுக்கே வக்கில்லாதவனாக இருந்திருந்தால் இப்படி தன் வக்கிரத்தை காட்டியிருப்பானா கண்டிப்பாக சந்தேகம் தான்.

பொதுவாக நான் படித்த வரையில் சில நண்பர்கள் மற்றும் ஒரு சாரரால் இங்கே பொதுவான ஒரு கருத்து எப்பொழுதும் வலியுறுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறது அது தமிழின் கமர்சியல் படங்கள் என்று அறியப்படும் படங்கள், பெரும் தோல்வியடைய வேண்டும், யதார்த்தமான படங்கள் மட்டுமே வெற்றியடைய வேண்டும் என்றும், இந்த சமூகம் அதை செய்ய தவறுகிறது, அதனால் இந்த சமூகம் உருப்படவே உருப்படாது என்ற கருத்தை வலியுறுத்தி கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு விஷயம் புரியவில்லை, இங்கே உள்ள மக்கள் சார்ந்த சமூகம் ஒன்றும் அடிமுட்டாள்கள் கிடையாது.ஒரு திரைப்படம், அது கலை படமாக இருந்தாலும் சரி, கமர்சியல் படமாக இருந்தாலும் சரி, இல்லை இரண்டும்கெட்டானாக இருந்தாலும் சரி, அரங்கினுள் வந்தமரும் ரசிகனை அவன் வாழ்வியலோடு இணைத்து பார்க்கும் காட்சிகளோடு பொருந்திபோய்விட்டாலே படம் வெற்றி தான். விடியும் முன் திரைப்படமும் மிகப்பெரிய பார்வையாளகளுடன் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடவில்லை என்றாலும் நான் பார்த்த வரையில் (மதுரையில்) குறிப்பிடதக்க பார்வையாளர்களுடனே ஓடிக்கொண்டிருக்கிறது. மேலே நான் குறிப்பட்டுள்ளது போல் திரைப்படம் என்பது கலையா? வணிகமா? அல்லது கலை சார்ந்த வணிகமா? இவை மூன்றையும் தாண்டி திரைப்படம் மனித மனதுக்கான வடிகால் எப்படி பார்க்கலாம் மீண்டும்..... இன்னுமொரு திரைப்படத்துடன்.....

No comments: