Thursday, November 28, 2013

படித்தவர்களின் மரியாதை?

கடந்த 2வாரங்களுக்கு முன் வெளியான ஆனந்தவிகடனில், (3Dயில் வெளியான முதல் வாரம்) நா.முத்துகுமாரின் தொடரான, வேடிக்கை பார்பவன் படித்து கொண்டிருந்தபோது பால்ய விஷயங்கள் பலவும் மனதிற்க்குள் தோன்றி மறைந்தன. கடைசியில் அந்த வண்டிக்காரண்ணே இந்தாங்க தம்பி என்று ஐஸ்கீரிமையும், பாப்கார்னையும் நீட்டி முத்துக்குமாரிடம் சாப்பிட வற்புறுத்தும் இடத்தில், எனக்கு மனதில் சுரீர்! என்று குத்திய விஷயம் வண்டிக்காரண்ணனின் மரியாதை.
நான் சிறுவயதாக இருந்த பொழுது, அதாவது என்னுடைய 8வது வயதில் என் அம்மாவை பெற்ற பாட்டியின் கிராமத்திற்கு சென்றிருந்தேன். அங்கே 30வயதை கடந்த ஒருவர் வீட்டுக்குள் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார், அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி விட்டு அவர் பெயர் சுப்பையா என்றார்கள். அவர் என்னை நீங்க வாங்க போங்க என்று, மிகுந்த மரியாதையோடு அழைத்தார். அவர் வயதிற்க்கு என்னை அவர் அப்படி அழைத்தது எனக்கு மனதிற்குள் ஒரு மாதிரி சங்கடத்தை கொடுத்தாலும், இன்னொருபுறம் கொஞ்சம் படிக்கும் ஆதிக்க மனோபாவம் சந்தோஷப்பட்டது. நான் அந்த திமிரில் அவரை நீ வா போ என்று ஒருமையில் கூப்பிட, அவர் அதை ஒரு பெரிய விஷயமாக கருதாமல், நான் என்ன வேலை சொன்னாலும் செய்தார். நான் அப்படி அழைப்பதை பார்த்த என் அம்மா, என்னை அழைத்து கண்டிக்க, நான் என் அம்மாவை மனதிற்க்குள் திட்டினேனே ஒழிய என் செயலை மாற்றிக்கொள்ளவில்லை. பின்னாட்களில் வாழ்கையின் பல்வேறு படி நிலைகளை கடந்து வந்த பிறகு, இப்பொழுது நினைத்தாலும் நான் எவ்வளவு கேவலமாக நடந்திருக்கிறேன் என்று பல முறை எண்ணி வருந்தியதுண்டு. பின்னாலில் பெரியவனானதும் அதே சுப்பையா அண்ணன் தோளில் கைபோட்டுக்கொண்டு, நீங்க வாங்க என்று அவர் வயதுக்குரிய மரியாதையுடன் மிகுந்த சந்தோசத்தோடு பேசியிருக்கிறேன். இதையெல்லாம் தாண்டி நம் சமுகத்தில், நான் கவனித்த வரையில், படித்தவர்களுக்கு என்று ஒரு மரியாதையை, குறிப்பாக கிராமத்தில் உள்ள மனிதர்கள் தர தவறுவதில்லை. தான் வயதில் எவ்வளவு மூத்தவராக இருந்தாலும், தன்னிடம் பேசிக் கொண்டிருப்பவர் படித்தவர் என்று தெரிந்தால், வாங்க தம்பி போங்க தம்பி என்று மிக மரியாதையோடே அழைக்கிறார்கள். ஆனால் ஒரு சில விதி விலக்குகளை தவிர, பெரும்பான்மை படித்தவர்களிடத்தில் இந்த பண்பு சுத்தமாக இருப்பதில்லை. அதுவும் கிராமத்துக்காரர் என்று தெரிந்தால் மிக கேவலமாகவே நடந்துகொள்கிறார்கள். இவர்கள் படித்த படிப்பில் படிக்காதவர்களை கண்டால் மதிக்காதே என்று, எங்கேனும் சொல்லப்பட்டிருகிறதா தெரியவில்லை. அதுவும் இக்கால குழந்தைகள் தன்னுடைய அப்பா அம்மாவையே நீ வா போ என்று ஒருமையில் தான் விளிக்கின்றன. என் மகன், 7வயசு தான் ஆகுது, எனக்கு மரியாதையே கொடுக்கமாட்டான். என்று பெருமையடித்து கொள்ளும் தந்தைகளும் இருக்கிறார்கள். அவர்களும் மெத்த படித்தவர்கள் என்பது தான் கொடுமையே. படிப்புக்கும் தனி மனித பண்புக்கும் சம்பந்தமேயில்லை என்பதை நான் பல முறை கண்டிருக்கிறேன். படித்தவர்கள் தாங்கள் பிறருக்கு (குறிப்பாக படிக்காதவர்களுக்கு) கொடுக்காத மரியாதையை தங்களுடைய பிள்ளைகளுக்காவது கற்றுக்கொடுத்தால் நல்லது. இல்லையென்றால் அடுத்த தலைமுறை யாரையும் மதிக்காத தலைமுறையாக்கதான் உருவாகும், பின்பு அவர்களை குற்றம் சொல்லி பயனில்லை.

No comments: