Thursday, March 18, 2010

மாத்தியோசிக்கவேயில்லை.

சில வருடங்களுக்கு முன்பு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த புதுவசந்தம் படம் மாபெரும் வெற்றி, அதை பின்தொடந்து 4கதாநாயகர்கள் 1கதாநாயகியை வைத்து வரிசையாக பல மொக்கை படங்கள் வெளிவந்தன. அத்தனை படத்திலும் கதை என்று ஒன்று மட்டும் இல்லை. புது வசந்தம் ஏற்படுத்திய பாதிப்பில் 4கதாநாயகன் 1கதாநாயகி இருந்தால், படம் ஓடிவிடும் என்று நினைத்து வெளிவந்த அவை சூப்பர் பிளாப் படங்கள்.

அதற்கு பிறகு இப்போழுது ரேணிகுண்டா அண்டாவாக ஏற்படுத்திய பாதிப்பு, அடுத்த படம் போன வாரம் வெள்ளி அன்று வெளிவந்திருக்கிறது. படத்தின் கதையை மட்டும் கொஞ்சம் மாத்தியோசித்திருக்கிறார்கள். (ரேணிகுண்டாவை அப்படியே காப்பி அடித்திருக்குறார்கள், என்று சொல்லிவிட கூடாது இல்லையா. ஆனால் ஒரு விஷயம், இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் தான் தொடங்கபட்டன, யார் யாரை காப்பி அடித்தார்கள் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.)

படத்தின் தலைப்பிலேயே இயக்குநர் தெளிவாக சொல்லிவிட்டார். மாத்தியோசிங்க என்று ஆனால் நான் தான் சுத்த மடையன், கொஞ்சம் மாத்தியோசித்திருந்தால் வேறு படத்திற்க்கு போயிருக்கலாம். நம் தலைவிதி மாட்டிக்கொண்டு முழிபிதுங்கி வெளியே வந்ததுதான் மிச்சம். இப்படி மரணஅடி வாங்கி ரொம்ப நாள் ஆகிவிட்டது. இரண்டு நாட்கள் அட்சர சுத்தமாக தலைவலி.

படத்தின் கதை வேறொன்றுமில்லை ரேணிகுண்டா படத்தை பார்த்திருப்பவர்கள் அதை கொஞ்சம் மாற்றி ரசிகர்களை தியேட்டரைவிட்டு ஒடவைக்கும் அளவுக்கு மாத்தியோசித்திருக்கிறார்கள். இரண்டு படங்களின் கதையையும் ஒப்பிட்டால் நாடு தாங்காது என்பதால் இத்துடன் முடித்து கொள்கிறேன். படம் முழுவதும் கஷ்டப்பட்டு ஒடிகொண்டிருக்கும் 4நாயகர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

டிஸ்கி : படம் பார்க்க செல்வதற்க்கு முன் நான் தான் மாத்தியோசிக்கவேயில்லைலைலை.

Monday, March 15, 2010

அஜித்திற்க்கு ஓர் அசலான வேண்டுகோள்.

எனக்கு பிடித்தமான நடிகர் என்ற முறையில், உங்களிடத்தில் ஓரு வேண்டுகோள். அசல் படம் வெளியான சில நாடகள் கழித்து, நீங்கள் பேசிய மேடைபேச்சு, சினிமாவை தாண்டிய ஒரு நாயகனாக உங்களை அனைவராலும் பார்க்க வைத்தது. தமிழ்நாட்டில் முக்கியமான அரசியல் சக்தியாக பார்க்கப்படும், (அவர் அரசியலில் இல்லாவிட்டாலும்) ரஜினிகாந்த் அவர்களே பக்கத்தில் முதல்வரை வைத்துக்கொண்டே எழுந்து நின்று கைதட்டினார் என்றால், உங்களின் பேச்சில் இருந்த நியாயம் அப்படிப்பட்டது. உங்களின் இந்த துணிச்சலான பேச்சு மற்றும் அது சம்பந்தமாக எத்தனை இடையூர்கள் வந்தாலும் உங்ளின் கருத்தில் நீங்கள் உறுதியாக இருந்த விதம், இவை அனைத்துமே மற்றவர்கள் கற்றுகொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் அதை பற்றி இப்போழுது பேசவரவில்லை. பேச வந்தது உங்களின் அசல் படம் பற்றி.

அசல் இந்த பெயரையும் இந்த படம் சம்பந்தமாக கொடுக்கப்பட்ட முதல் விளம்பரத்தில் உங்களின் படத்தையும் பார்த்தவுடன், அதில் உங்களின் உடல்மொழி, சிகையலங்காரம், முகஒப்பனை எல்லாமூமாக சேர்த்து ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்தின் மீது எற்படுத்தியது. அதற்கு பின்னர் படத்தை பற்றி வரும் செய்திகளும், உங்களின் பல்வேறு விதமான படங்களும் மற்றும் படம் முழுவதும் 90% வெளிநாட்டிலும் 10% மட்டுமே இந்தியாவிலும் எடுக்கப்பட்டதாக வந்த செய்திகள், அந்த எதிர்பார்ப்பை தக்கவைத்தபடியே இருந்தது. படத்தின் ஒலிநாடா வெளியீட்டின் போது மற்றுமொரு ஆச்சர்யம், நீங்கள் இருவேடங்கள் ஏற்று நடிக்கிறீர்கள் என்பது. இப்படி எதிர்பார்ப்புடன் இருந்த நேரத்தில் முதல் நெருடலாக படத்தின் திரைகதையிலும், இயக்கத்திலும் உங்களின் பெயர் வருகிறது என்றவுடன் எதிர்பார்ப்பில் பாதி சிதைந்தது. படம் வெளிவந்தவுடன் ஆவலோடு படம் பார்க்க சென்றேன். படம் ஓடிகொண்டிருக்கும் பொழுது தியேட்டரில் வந்த கமெண்டுகள் இங்கு அச்சில் ஏற்ற இயலாது. படத்தை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.

ஓரு நடிகன் இயக்குநராக ஆசைபட்டால் அது கண்டிப்பாக வரவேற்க படவேண்டியதே. ஆனால் அதற்கு அவர்கள் எடுத்துகொள்ளும் முயற்சிகள் தான் பிரச்சனையே. உங்களுக்கு இயக்குநராக ஆசையிருந்தால் தாராளமாக துணிந்து இறங்குங்கள். அதை வரவேற்கிறோம். ஆனால் அதற்கான முறை இதுவல்ல. நீங்கள் இயக்குநராக வேண்டும் என்று முடிவுசெய்தால் நடிப்பதை ஒரு வருடத்திற்க்கு நிறுத்துங்கள். உங்களுக்கு இப்பொழுது இருக்கும் செல்வாக்கில், உங்களுக்கு பிடித்தமான நீங்கள் குருவாக மதிக்கும் ஒர் இயக்குநரிடம் வாய்ப்புகேட்டு, இணைஇயக்குநராக சேர்ந்து அந்த பணியை மட்டும் செய்யுங்கள். அடுத்த ஒரு வருடத்திற்க்கு அதில் மட்டுமே உங்கள் கவனத்தை முழுவதுமாக ஈடுபடுத்துங்கள். பின்னர் அந்த ஒரு வருடத்தில், உங்களுக்கு நம்மால் ஒரு படத்தை இயக்கி நடிக்க முடியும் என்று நம்பிக்கை வந்தால், தாராளமாக வந்து படம் இயக்கி நடியுங்கள். அதுதான் சரியான முறை. இல்லை இயக்குநர் ஆகவேண்டாம் என்று முடிவு செய்தால், உங்கள் நடிப்பை மட்டும் தொடருங்கள்.

உங்களின் நடிப்பின் மேல் மிகுந்த மரியாதை வைத்திருப்பவன் நான். நீங்கள் நடித்த வாலி மற்றும் வரலாறு போன்ற படங்களை எடுத்துகொண்டால், அந்தந்த காலகட்டங்களில் அது ஒரு மிக மிக துணிச்சலான முயற்சி வாலி படத்தை எடுத்துகொண்டால், நீங்கள் மிக வேகமாக முன்னேறி வரும் சமயம். உங்களுக்கென்று என்று தனி இமேஜ் மற்றும் ரசிகர்கள் உருவாகி கொண்டிருக்கும் நேரம். யாரும் நினைத்து பார்க்கவே யோசிக்கும் வில்லன் வேடத்தை, அதுவும் வாய்பேச முடியாத வில்லனாக இமேஜ் பற்றி கவலைபடாமல் நடித்திருந்தீர்கள். வில்லன் நடிப்பிலும் அன்று பரவலாக பாராட்டை பெற்ற ஒரு படம். இந்த சந்தர்பத்தில் அஜித் இப்படிபட்ட ஓர் வில்லன் வேடம் ஏற்று நடிக்க ஒரு தில் வேண்டும் என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். அதேபோல் வரலாறு படம் வெளியான சமயம் நீங்கள் உச்சத்தில் இருக்கிறீர்கள். காதாநாயகனாக நடிக்கும் யாரும், யோசிக்கவே முடியாத வேடம் அந்த படத்தில் நீங்கள் ஏற்று நடித்த பெண்மை கலந்த ஒரு பரதநாட்டியமாடும் ஆணின் வேடம். உண்மையாக சொல்லவேண்டும் என்றால் அசாத்தியமாக அந்தவேடத்தை செய்திருந்தீர்கள். இப்படி நீங்கள் நடிப்பின் மேல் கொண்ட பற்று பலமுறை பலரை ஆச்சர்ய்யபடவைத்திருக்கிறது. இவ்விரு படங்களும் ஓர் எடுத்துகாட்டு மட்டுமே. அந்த வரிசையில் முகவரி, கீரிடம் போன்ற பல படங்களை சொல்லலாம். ஆனால் அசல்?.

ஒரு நடிகன் இரு வேடங்களை ஏற்று நடிக்கும் ஒரு படத்தில் தன்னுடைய இரண்டு வேடங்களின் வெவ்வேறு விதமான பரிமாணங்களை திரையில் கொண்டு வருவதன் மூலம் நடிப்பின் மற்றோரு உச்சத்தை தொடமுடியும். அதற்கு நீங்கள் நடித்து வெளிவந்த மேலே குறிப்பிட்ட இரண்டு படங்களுமே சாட்சி. ஆனால் அசல் படத்தில் நீங்கள் செய்த இரு வேடங்களுக்கு உரிய வித்தியாசத்தை வெறும் தலைமுடியின் நிறத்தை மாற்றுவதில் மட்டுமே கொண்டுவந்திருக்கிறீர்கள். உடல் மொழியில் கூட பெரிய வித்தியாசத்தை காட்டவில்லை. ஏன் அஜித்?. இன்றைக்கு இருக்கும் வசதிவாய்ப்புகளில், அந்த தந்தையின் வேடத்தை மேக்கப்பின் மூலமும், உடல்மொழியின் மூலமும் மிகப்பெரும் வித்தியாசத்தை கொண்டு வந்து கலக்கி இருக்க முடியும். சிறுபட்ஜெட் படமென்றால் கூட இதற்கு கூறிய வசதி வாய்ப்புகள் இல்லை என்று கூறலாம். ஆனால் படம் மிகப்பெரிய பட்ஜெட் பணத்தை இறைத்திருக்கிறார்கள் 90% படம் வெளிநாட்டில் படமாக்கபட்டிருக்கிறது. ஒவ்வொரு பிரேமிலும் ரிச்னஸ் மின்னுகிறது. அப்படியிருந்தும் ஏன்? நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தாததால் வந்த வினையா இது?.

இன்று உங்கள் முன் இருக்கும் தமிழ் திரைபடவுலகம் மாற்று சினிமாவை நோக்கி ஓர் ஆரோக்கியமான பாதையில் போக ஆரம்பித்திருக்கிறது. உங்களின் முந்தைய தலைமுறை நடிகர்களான ரஜினி, கமல் இருந்த காலகட்டத்தில் இத்தகையதொரு ஆரோக்கியமான சூழல் இல்லை. அப்படி இருந்தும் திரு.கமலஹாசன் மாற்று சினிமாக்களை அவருடைய காலம் தொட்டே முயற்சித்துக்கொண்டே இருந்தார். ராஜபார்வையிலிருந்து இன்றைய அன்பேசிவம் வரை அவர் சந்தித்த தோல்விகளே அதிகம். ராஜபார்வை, குணா, ஹேராம், குருதிபுனல், அன்பேசிவம் போன்ற இன்று ரசிகர்களால் பாராட்டையும், கொண்டாத்தையும் பெரும் பல படங்கள் அன்றைய நிலையில் தோல்வி படங்களே. ஆனால் என்றும் அவருடைய முயற்சியை கைவிட்டதில்லை. ஆனால் இன்று உங்கள் முன்னால் ரசிகர்கள் மாற்று சினிமாவை கொண்டாட தயாராக இருக்கிறார்கள். அதற்கு சமிபத்திய பல படங்களை உதாரணமாக சொல்லமுடியும். காதல், வெயில், பருத்திவீரன், மொழி, அஞ்சாதே, வெண்ணிலாகபடிகுழு, சுப்புரமணியபுரம், பசங்க இப்படி சொல்லிகொண்டே போகலாம். இந்த படங்களில் நடித்தவர்கள் யாரும், மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர்கள் கிடையாது. நல்லகதையும், சிறந்த திரைகதையும் மட்டுமே இப்படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணங்கள். மாற்று சினிமாவை கொண்டுவர பல தோல்விகளுக்கு இடையே போராடிய திரு.கமலஹாசனுக்கு அவருடைய தொடக்க காலத்தில் கிடைக்காத வாய்ப்பு இன்று உங்கள் முன்னால் பரந்து விரிந்து கிடக்கிறது. அதனால் உங்கள் ஹீரோயிஸம், இமேஜ் எல்லாவற்றையும் தூக்கி ஏறிந்துவிட்டு, நல்லகதை மற்றும் சிறந்த திரைகதையை தேர்ந்தெடுத்து நடியுங்கள். அதை தான் உங்களிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

உங்கள் படங்கள் அடையும் தோல்வி உங்களை மற்றும் உங்கள் குழுவை சேர்ந்தவர்களை மட்டும் பாதிப்பவை அல்ல. அது பரவலாக இன்றைக்கு வாழ்க்கையில் போராடிகொண்டிருக்கும் பல இளைஞர்களை பாதிக்கிறது. ஏனென்றால் எந்தவிதமான சினிமா பின்புலமும் இல்லாமல் மிகப்பெரிய போராட்டதிற்க்கு இடையே இந்த இடத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். அதை இன்றைக்கு பலபேர் முன்மாதிரியாக எடுத்துகொண்டு வெற்றிபெற போராடி கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன். உங்களின் தோல்வி உங்களை மட்டுமல்ல பலபேரை பாதிக்கிறது என்று. ஒரு படம் சரியில்லையென்றால் அந்த படத்தில் நடித்த நடிகரை நார் நாராக கிழித்து தொங்கபோட்டு விடுகிறார்கள், இணையதளத்தின் மூலமும் குறிப்பாக செல்போன் குறுஞ்செய்தியின் மூலமும் இப்படி பல வழிகளில். அதை அந்தந்த நடிகர்கள் பார்த்தார்கள் என்றால் அவர்கள் நிலைமை பாவம் என்னத்த சொல்ல. ஆனால் உங்களிடத்தில் மட்டும் அந்தளவு கடுமையை யாரும் காட்டுவதில்லை. காரணம் உங்களின் போராட்டம் மிகுந்த வாழ்க்கை. அதை அனைவரும் மதிக்கிறார்கள். பல நேர்காணல்களின் போதும் நீங்கள் சொல்வதுபோல் செத்துபிழைத்து தான் இந்த இடத்தை பிடித்திருக்கிறீர்கள். இன்றைக்கு இருக்கும் பல இளைஞர்கள் தான் சார்ந்த துறையில் எந்த விதமான பெரியபின்புலமும் இல்லாமல் வெற்றிக்கு போராடி கொண்டிருப்பவர்கள் தாம். உங்களின் வெற்றி என்பது அப்படிபட்ட இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய உந்துதல் எனபதை நீங்கள் மறக்கவேண்டாம். அதனால் தான் பல நேரங்களில் தன்னபிக்கை என்றால் அது அஜித் என்று அடையாளப்படுத்தபட்டிருக்கிறது. உங்களின் சகபோட்டியாளரான விஜய் கூட ஒரு தொலைகாட்சி நேர்காணலின் போது அஜித்திடம் உங்களுக்கு பிடித்த விஷயம் எது என்று கேட்டபோது, அவரின் தன்னபிக்கை என்று குறிப்பிட்டார். அதுதான் உங்களின் அடையாளம். அதை மற்றவர்களுக்கும் கொடுக்கும் விதமாக ஒரு சக தோழனாக, ஒரு சகோதரனாக உங்களிடமிருந்து ஒரு மிகப்பெரிய வெற்றியை மாற்று சினிமாவின் வாயிலாக எதிர்பார்க்கிறேன். நன்றி.

Saturday, March 13, 2010

நீயா நானாவும், ஆண்களுக்கு ஆப்பும்.

சில மாதங்களுக்கு முன்னர் சரியான தேதி நினைவில் இல்லை. விஜய் தொலைக்காட்சியில் வரும் நீயாநானா நிகழ்ச்சி, அதன் தலைப்பு பெண்கள் தனக்கு வரப்போகும் கணவரிடம் என்னென்ன எதிர்பார்புகளை வைத்திருக்கிறார்கள் என்பது தான். அவர்களின் எதிர்பார்புகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பிக்க, எனக்கு தலை கிறுகிறுத்து பூமி இரண்டாக பிளப்பது போல் ஒரு பிரம்மை. (ஏனென்றால் நான் திருமணம் ஆகாதவன்) அதில் ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பு, தனக்கு வரப்போகும் வருங்கால கணவன் மாதம் 1லட்சரூபாய்க்கு மேல் சம்பாதிக்க வேண்டும், சொந்தமாக நகரத்தின் முக்கியமான இடத்தில் வீடு இருக்க வேண்டும், வங்கியில் வைப்பு தொகையாக 10லட்சம் முதல் 15லட்சம் வரை இருக்க வேண்டும், அப்புறம் சொந்தமாக ஒரு கார், அவ்வளவு தான் என்றாரே பார்க்கலாம். எப்படி நமக்கு தலை சுற்றாமல் இருக்கும். இப்படி பலவிதமான எதிர்பார்ப்புகள் அந்த நிகழ்ச்சியில் பெண்களிடம் இருந்து வகை வகையாக வந்துகொண்டே இருந்தது. இதில் குறிப்பிட வேண்டிய, விஷயம் இவர்கள் அனைவரும் மெத்த படித்தவர்கள்.

எனக்கு தெரிந்து ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எந்த ஆணாலும், இவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய இயலாது. அப்படிப்பட்ட ஆண்கள் சந்தர்ப்பவசத்தால் இப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்தால், சொல்லத்தேவையில்லை சத்தியமாக அவர்களின் வாழ்க்கை நரகம் தான். பெண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. அப்படி படித்து வேலைக்கு செல்லும் பெண்களின் எதிர்பார்ப்புகள் தான் மேலே சொன்னது. ஒரு சில பெண்கள் வேண்டுமானால் விதி விலக்காக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான பெண்களின் மனநிலை பணம், வசதி, ஆடம்பரத்தின் மீது தான் இருக்கிறது. அந்த நீயாநானா நிகழ்ச்சியில் பேசிய பெண்கள் யாரும் நானும், என் வருங்கால கணவரும் சாகும்வரை காதலோடும் சந்தோசத்தோடும் வாழவேண்டும் என்றோ, எனக்கு வரப்போகும் கணவர், எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒழுக்கமானவராக இருக்க வேண்டும் என்றோ குறிப்பிடவில்லை. முதலில் பணம் இருந்தால் போதும், மற்ற விஷயங்களை பற்றி கவலையில்லை என்ற மனநிலையில் தான் இருந்தார்கள். சமீபத்தில் உலகம் முழுவதும் ஒர் சர்வே எடுக்கப்பட்டது. அதில் ஆணிடம் கேட்கப்பட்ட கேள்வி நீங்கள் பெண்ணிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் பெரும்பாலான ஆண்கள் சொன்னது அரோக்கியமும், அழகும், அன்பும். ஆனால் பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பதாக சொன்னது. 98% பெண்கள் பணம் பணம் பணம் மட்டுமே. 18% பேர்கள் மட்டுமே அன்பை பற்றி பேசியது.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும், ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு நிறைய உதாரணங்கள் கடந்த காலத்தில் இருக்கின்றன. ஆனால் இன்றைய நிலைமையில் ஒரு வெற்றி பெற்ற ஆணின் பின்னால்போய் ஒளிந்துகொள்ள பெரும்பாலான பெண்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கையில் வெற்றிபெற போராடி கொண்டிருக்கும் ஒருவனையோ, தோல்வி அடைந்து துவண்டுபோயிருக்கும் ஒருவனையோ இவர்கள் திரும்பிகூட பார்க்க தயாராக இல்லை. அப்படி இவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஒரு ஆணுடன் கடைசிவரை சந்தோசமாக வாழ்க்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது. இவர்கள் திருமணம் முடிந்ததும் செய்யும் முதல் காரியம் கணவனின் குடும்பத்தாரிடம் இருந்து, சில சின்ன சின்ன சப்பை காரணங்களை சொல்லி, அவனை முதல் வேலையாக பிரித்து தனிகுடித்தனம் செல்வது. கணவன் எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு குறிப்பிட்ட பிக்ஸ் செய்யப்பட்ட தொகையை மட்டும், மாதா மாதம் அவனின் பெற்றோர்களிடம் கொடுத்துவிட்டு, மீதி தொகை முழுவதும் தன்குடும்பத்துக்கு மட்டும் தான் என்பதில் மிக தெளிவாக இருக்கிறார்கள். இவர்களுக்கு தன்னுடைய கணவனின் கடந்தகாலத்தை பற்றியும், அதில் அவனின் இந்த வெற்றிக்கு பின்னால் யாரெல்லாம் இருந்தார்கள் என்பது பற்றியும், துளியளவும் கவலையில்லை.

இன்று பல குடும்பங்கள் பிரிந்து நிம்மதியற்ற தனிகுடித்தனமாகவும், பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் போய் தஞ்சமடையும் மிக மிக கேவலமான நிலைமை அதிகமாகி கொண்டே போகிறது. இன்று குடும்பநல நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு குவிந்து கொண்டிருக்கின்றன. 2வருடங்களில் 6மடங்கு அதிகமாகி இருக்கிறது. இதில் பெரும்பான்மையான வழக்குகளில் கணவன், மனைவி இருவருமே மெத்த படித்தவர்கள். இன்றைய கல்விமுறை பணம் சம்பாதிப்பதை தவிர ஒரு ம....ரையும் சொல்லி கொடுப்பதில்லை. இப்படிப்பட்ட சமூகத்தில் வளரும் குழந்தைகளின் நிலைமை?. நேற்று கூட்டுக்குடும்பங்களின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்தன. ஆனால் இன்று தனிகுடித்தனத்திலோ, விவாகரத்தான தாயிடமோ, தந்தையிடமோ வளரும் குழந்தைகள் கெட்டு சிரழிய அனைத்து வாய்ப்புகளும் கண்முன்னே இருக்கின்றன. அவர்களை கட்டுபடுத்தி கற்றுதர சுற்றிலும் யாரும் இல்லை. அவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இவற்றின் தொடக்கம் எங்கே ஆரம்பிக்கிறது. திரும்பவும் முதல் பாராவில் இருந்து தான் வரவேண்டும்.