எனக்கு பிடித்தமான நடிகர் என்ற முறையில், உங்களிடத்தில் ஓரு வேண்டுகோள். அசல் படம் வெளியான சில நாடகள் கழித்து, நீங்கள் பேசிய மேடைபேச்சு, சினிமாவை தாண்டிய ஒரு நாயகனாக உங்களை அனைவராலும் பார்க்க வைத்தது. தமிழ்நாட்டில் முக்கியமான அரசியல் சக்தியாக பார்க்கப்படும், (அவர் அரசியலில் இல்லாவிட்டாலும்) ரஜினிகாந்த் அவர்களே பக்கத்தில் முதல்வரை வைத்துக்கொண்டே எழுந்து நின்று கைதட்டினார் என்றால், உங்களின் பேச்சில் இருந்த நியாயம் அப்படிப்பட்டது. உங்களின் இந்த துணிச்சலான பேச்சு மற்றும் அது சம்பந்தமாக எத்தனை இடையூர்கள் வந்தாலும் உங்ளின் கருத்தில் நீங்கள் உறுதியாக இருந்த விதம், இவை அனைத்துமே மற்றவர்கள் கற்றுகொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் அதை பற்றி இப்போழுது பேசவரவில்லை. பேச வந்தது உங்களின் அசல் படம் பற்றி.
அசல் இந்த பெயரையும் இந்த படம் சம்பந்தமாக கொடுக்கப்பட்ட முதல் விளம்பரத்தில் உங்களின் படத்தையும் பார்த்தவுடன், அதில் உங்களின் உடல்மொழி, சிகையலங்காரம், முகஒப்பனை எல்லாமூமாக சேர்த்து ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்தின் மீது எற்படுத்தியது. அதற்கு பின்னர் படத்தை பற்றி வரும் செய்திகளும், உங்களின் பல்வேறு விதமான படங்களும் மற்றும் படம் முழுவதும் 90% வெளிநாட்டிலும் 10% மட்டுமே இந்தியாவிலும் எடுக்கப்பட்டதாக வந்த செய்திகள், அந்த எதிர்பார்ப்பை தக்கவைத்தபடியே இருந்தது. படத்தின் ஒலிநாடா வெளியீட்டின் போது மற்றுமொரு ஆச்சர்யம், நீங்கள் இருவேடங்கள் ஏற்று நடிக்கிறீர்கள் என்பது. இப்படி எதிர்பார்ப்புடன் இருந்த நேரத்தில் முதல் நெருடலாக படத்தின் திரைகதையிலும், இயக்கத்திலும் உங்களின் பெயர் வருகிறது என்றவுடன் எதிர்பார்ப்பில் பாதி சிதைந்தது. படம் வெளிவந்தவுடன் ஆவலோடு படம் பார்க்க சென்றேன். படம் ஓடிகொண்டிருக்கும் பொழுது தியேட்டரில் வந்த கமெண்டுகள் இங்கு அச்சில் ஏற்ற இயலாது. படத்தை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஓரு நடிகன் இயக்குநராக ஆசைபட்டால் அது கண்டிப்பாக வரவேற்க படவேண்டியதே. ஆனால் அதற்கு அவர்கள் எடுத்துகொள்ளும் முயற்சிகள் தான் பிரச்சனையே. உங்களுக்கு இயக்குநராக ஆசையிருந்தால் தாராளமாக துணிந்து இறங்குங்கள். அதை வரவேற்கிறோம். ஆனால் அதற்கான முறை இதுவல்ல. நீங்கள் இயக்குநராக வேண்டும் என்று முடிவுசெய்தால் நடிப்பதை ஒரு வருடத்திற்க்கு நிறுத்துங்கள். உங்களுக்கு இப்பொழுது இருக்கும் செல்வாக்கில், உங்களுக்கு பிடித்தமான நீங்கள் குருவாக மதிக்கும் ஒர் இயக்குநரிடம் வாய்ப்புகேட்டு, இணைஇயக்குநராக சேர்ந்து அந்த பணியை மட்டும் செய்யுங்கள். அடுத்த ஒரு வருடத்திற்க்கு அதில் மட்டுமே உங்கள் கவனத்தை முழுவதுமாக ஈடுபடுத்துங்கள். பின்னர் அந்த ஒரு வருடத்தில், உங்களுக்கு நம்மால் ஒரு படத்தை இயக்கி நடிக்க முடியும் என்று நம்பிக்கை வந்தால், தாராளமாக வந்து படம் இயக்கி நடியுங்கள். அதுதான் சரியான முறை. இல்லை இயக்குநர் ஆகவேண்டாம் என்று முடிவு செய்தால், உங்கள் நடிப்பை மட்டும் தொடருங்கள்.
உங்களின் நடிப்பின் மேல் மிகுந்த மரியாதை வைத்திருப்பவன் நான். நீங்கள் நடித்த வாலி மற்றும் வரலாறு போன்ற படங்களை எடுத்துகொண்டால், அந்தந்த காலகட்டங்களில் அது ஒரு மிக மிக துணிச்சலான முயற்சி வாலி படத்தை எடுத்துகொண்டால், நீங்கள் மிக வேகமாக முன்னேறி வரும் சமயம். உங்களுக்கென்று என்று தனி இமேஜ் மற்றும் ரசிகர்கள் உருவாகி கொண்டிருக்கும் நேரம். யாரும் நினைத்து பார்க்கவே யோசிக்கும் வில்லன் வேடத்தை, அதுவும் வாய்பேச முடியாத வில்லனாக இமேஜ் பற்றி கவலைபடாமல் நடித்திருந்தீர்கள். வில்லன் நடிப்பிலும் அன்று பரவலாக பாராட்டை பெற்ற ஒரு படம். இந்த சந்தர்பத்தில் அஜித் இப்படிபட்ட ஓர் வில்லன் வேடம் ஏற்று நடிக்க ஒரு தில் வேண்டும் என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். அதேபோல் வரலாறு படம் வெளியான சமயம் நீங்கள் உச்சத்தில் இருக்கிறீர்கள். காதாநாயகனாக நடிக்கும் யாரும், யோசிக்கவே முடியாத வேடம் அந்த படத்தில் நீங்கள் ஏற்று நடித்த பெண்மை கலந்த ஒரு பரதநாட்டியமாடும் ஆணின் வேடம். உண்மையாக சொல்லவேண்டும் என்றால் அசாத்தியமாக அந்தவேடத்தை செய்திருந்தீர்கள். இப்படி நீங்கள் நடிப்பின் மேல் கொண்ட பற்று பலமுறை பலரை ஆச்சர்ய்யபடவைத்திருக்கிறது. இவ்விரு படங்களும் ஓர் எடுத்துகாட்டு மட்டுமே. அந்த வரிசையில் முகவரி, கீரிடம் போன்ற பல படங்களை சொல்லலாம். ஆனால் அசல்?.
ஒரு நடிகன் இரு வேடங்களை ஏற்று நடிக்கும் ஒரு படத்தில் தன்னுடைய இரண்டு வேடங்களின் வெவ்வேறு விதமான பரிமாணங்களை திரையில் கொண்டு வருவதன் மூலம் நடிப்பின் மற்றோரு உச்சத்தை தொடமுடியும். அதற்கு நீங்கள் நடித்து வெளிவந்த மேலே குறிப்பிட்ட இரண்டு படங்களுமே சாட்சி. ஆனால் அசல் படத்தில் நீங்கள் செய்த இரு வேடங்களுக்கு உரிய வித்தியாசத்தை வெறும் தலைமுடியின் நிறத்தை மாற்றுவதில் மட்டுமே கொண்டுவந்திருக்கிறீர்கள். உடல் மொழியில் கூட பெரிய வித்தியாசத்தை காட்டவில்லை. ஏன் அஜித்?. இன்றைக்கு இருக்கும் வசதிவாய்ப்புகளில், அந்த தந்தையின் வேடத்தை மேக்கப்பின் மூலமும், உடல்மொழியின் மூலமும் மிகப்பெரும் வித்தியாசத்தை கொண்டு வந்து கலக்கி இருக்க முடியும். சிறுபட்ஜெட் படமென்றால் கூட இதற்கு கூறிய வசதி வாய்ப்புகள் இல்லை என்று கூறலாம். ஆனால் படம் மிகப்பெரிய பட்ஜெட் பணத்தை இறைத்திருக்கிறார்கள் 90% படம் வெளிநாட்டில் படமாக்கபட்டிருக்கிறது. ஒவ்வொரு பிரேமிலும் ரிச்னஸ் மின்னுகிறது. அப்படியிருந்தும் ஏன்? நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தாததால் வந்த வினையா இது?.
இன்று உங்கள் முன் இருக்கும் தமிழ் திரைபடவுலகம் மாற்று சினிமாவை நோக்கி ஓர் ஆரோக்கியமான பாதையில் போக ஆரம்பித்திருக்கிறது. உங்களின் முந்தைய தலைமுறை நடிகர்களான ரஜினி, கமல் இருந்த காலகட்டத்தில் இத்தகையதொரு ஆரோக்கியமான சூழல் இல்லை. அப்படி இருந்தும் திரு.கமலஹாசன் மாற்று சினிமாக்களை அவருடைய காலம் தொட்டே முயற்சித்துக்கொண்டே இருந்தார். ராஜபார்வையிலிருந்து இன்றைய அன்பேசிவம் வரை அவர் சந்தித்த தோல்விகளே அதிகம். ராஜபார்வை, குணா, ஹேராம், குருதிபுனல், அன்பேசிவம் போன்ற இன்று ரசிகர்களால் பாராட்டையும், கொண்டாத்தையும் பெரும் பல படங்கள் அன்றைய நிலையில் தோல்வி படங்களே. ஆனால் என்றும் அவருடைய முயற்சியை கைவிட்டதில்லை. ஆனால் இன்று உங்கள் முன்னால் ரசிகர்கள் மாற்று சினிமாவை கொண்டாட தயாராக இருக்கிறார்கள். அதற்கு சமிபத்திய பல படங்களை உதாரணமாக சொல்லமுடியும். காதல், வெயில், பருத்திவீரன், மொழி, அஞ்சாதே, வெண்ணிலாகபடிகுழு, சுப்புரமணியபுரம், பசங்க இப்படி சொல்லிகொண்டே போகலாம். இந்த படங்களில் நடித்தவர்கள் யாரும், மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர்கள் கிடையாது. நல்லகதையும், சிறந்த திரைகதையும் மட்டுமே இப்படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணங்கள். மாற்று சினிமாவை கொண்டுவர பல தோல்விகளுக்கு இடையே போராடிய திரு.கமலஹாசனுக்கு அவருடைய தொடக்க காலத்தில் கிடைக்காத வாய்ப்பு இன்று உங்கள் முன்னால் பரந்து விரிந்து கிடக்கிறது. அதனால் உங்கள் ஹீரோயிஸம், இமேஜ் எல்லாவற்றையும் தூக்கி ஏறிந்துவிட்டு, நல்லகதை மற்றும் சிறந்த திரைகதையை தேர்ந்தெடுத்து நடியுங்கள். அதை தான் உங்களிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
உங்கள் படங்கள் அடையும் தோல்வி உங்களை மற்றும் உங்கள் குழுவை சேர்ந்தவர்களை மட்டும் பாதிப்பவை அல்ல. அது பரவலாக இன்றைக்கு வாழ்க்கையில் போராடிகொண்டிருக்கும் பல இளைஞர்களை பாதிக்கிறது. ஏனென்றால் எந்தவிதமான சினிமா பின்புலமும் இல்லாமல் மிகப்பெரிய போராட்டதிற்க்கு இடையே இந்த இடத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். அதை இன்றைக்கு பலபேர் முன்மாதிரியாக எடுத்துகொண்டு வெற்றிபெற போராடி கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன். உங்களின் தோல்வி உங்களை மட்டுமல்ல பலபேரை பாதிக்கிறது என்று. ஒரு படம் சரியில்லையென்றால் அந்த படத்தில் நடித்த நடிகரை நார் நாராக கிழித்து தொங்கபோட்டு விடுகிறார்கள், இணையதளத்தின் மூலமும் குறிப்பாக செல்போன் குறுஞ்செய்தியின் மூலமும் இப்படி பல வழிகளில். அதை அந்தந்த நடிகர்கள் பார்த்தார்கள் என்றால் அவர்கள் நிலைமை பாவம் என்னத்த சொல்ல. ஆனால் உங்களிடத்தில் மட்டும் அந்தளவு கடுமையை யாரும் காட்டுவதில்லை. காரணம் உங்களின் போராட்டம் மிகுந்த வாழ்க்கை. அதை அனைவரும் மதிக்கிறார்கள். பல நேர்காணல்களின் போதும் நீங்கள் சொல்வதுபோல் செத்துபிழைத்து தான் இந்த இடத்தை பிடித்திருக்கிறீர்கள். இன்றைக்கு இருக்கும் பல இளைஞர்கள் தான் சார்ந்த துறையில் எந்த விதமான பெரியபின்புலமும் இல்லாமல் வெற்றிக்கு போராடி கொண்டிருப்பவர்கள் தாம். உங்களின் வெற்றி என்பது அப்படிபட்ட இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய உந்துதல் எனபதை நீங்கள் மறக்கவேண்டாம். அதனால் தான் பல நேரங்களில் தன்னபிக்கை என்றால் அது அஜித் என்று அடையாளப்படுத்தபட்டிருக்கிறது. உங்களின் சகபோட்டியாளரான விஜய் கூட ஒரு தொலைகாட்சி நேர்காணலின் போது அஜித்திடம் உங்களுக்கு பிடித்த விஷயம் எது என்று கேட்டபோது, அவரின் தன்னபிக்கை என்று குறிப்பிட்டார். அதுதான் உங்களின் அடையாளம். அதை மற்றவர்களுக்கும் கொடுக்கும் விதமாக ஒரு சக தோழனாக, ஒரு சகோதரனாக உங்களிடமிருந்து ஒரு மிகப்பெரிய வெற்றியை மாற்று சினிமாவின் வாயிலாக எதிர்பார்க்கிறேன். நன்றி.
No comments:
Post a Comment