Friday, February 19, 2010

மை நேம் ஈஸ் கானும் கமர்சியல் ஹீரோக்களும்

முதலில் பக்கா கமர்சியல் ஹீரோவாக (ஷாருக்கான்) அறியபடும் ஒருவர் இந்த வேடத்தை ஏற்க்க முடிவுசெய்தது மிக நல்ல விஷயம். படத்தில் எந்த இடத்திலும் கமர்சியல் படத்துக்கு தேவைபடுவதாக சொல்லபடும் பஞ்ச் டைலாக், குத்துபாடல், சண்டைகாட்சிகள், காமெடி இப்படி இன்னபிற அயிட்டங்கள் இல்லாத ஒரு தெளிந்த நீரோடை போன்ற திரைகதையில் எந்தவித மாற்று முகஒப்பனை கூட இல்லாமல் அந்த பாத்திரத்திற்க்கு தேவையான உடல்மொழி மற்றும் வசனஉச்சரிப்பின் மூலமே தன்னை வித்தியாசபடுத்தி காட்டியிருக்கிறார் ஷாருக். கதையின் நாயகி கஜோல் தன்னுடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றவர். 13வயது பையனின் தாய். தமிழில் இந்த பாத்திரத்தை யார் ஏற்று நடிப்பார்கள் என்று யோசித்தால் சிரிப்புதான் வந்தது.

படத்தின் கதை இஸ்லாமியர்கள் என்றாலே அமெரிக்க மக்களின் பொது புத்தியில் ஊறிபோயிருக்கும் வன்மம் எந்த அளவு ஒரு இஸ்லாமியனை கடுமையாக பாதிக்கிறது. அதனால் அவனுக்கு வாழ்க்கையில் ஏற்படும் மிகப்பெரிய இழப்பு. அதன் காரணமாக அவன் மேற்கொள்ளும் பயணம். பயணத்தின் முடிவில் அமெரிக்க மக்களுக்கு அவன் சொல்லும் செய்தி என்ன என்பதே கதை. கதாநாயகன் மேற்கொள்ளும் பயணத்தின் ஊடே பல காட்சிகளில் அமெரிக்காவின் இன்னொரு முகம் காட்டப்படுகிறது. அமெரிக்கா என்றால் அது பணக்கார நாடு, அனைவரும் படித்தவர்கள் பண்பு தெரிந்தவர்கள், அந்நாடு ஒரு பணம் கொழிக்கும் நாடு, அது ஒரு கனவு தேசம் என்பது போன்ற மாயைகள் படித்தவர்களிடத்தில் கூட உள்ள நிலையில், நாம் பார்க்கும் திரைபடங்களில் கூட அவ்வாறே காட்டப்பட்டு கொண்டிருக்க, இந்த படத்தில் அங்கேயும் ஒதுக்கப்பட்ட இன மக்கள் இருக்கிறார்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் அடிபடைவசதி கூட கிடையாது 2நாள் கன மழைக்கே மொத்த ஊரும் தண்ணிரில் மிதக்க ஆரம்பித்து விடும் போன்றவற்றை பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் இங்குள்ள அமெரிக்க மோகம் பிடித்து ஆட்டும் படித்த முட்டாள்களுக்கு தெரியுமா அப்படியே தெரிந்தாலும் அதை ஏற்றுகொள்வார்களா தெரியவில்லை.

படத்தின் முதல் காட்சிலேயே இஸ்லாமியன் என்ற ஒரே காரணதிற்க்காக அமெரிக்கர்களால் ஒருவன் நடத்தபடும் விதம் அதனால் அவனுக்கு ஏற்படும் வலியை படம் பார்பவர்களும் உணரும் விதமாக காட்சிபடுத்தி இருக்கிறார்கள்.

படம் இஸ்லாம் வன்முறையை போதிக்கவில்லை என்பதை ஆங்காங்கே ஆணிஅடிதார்போல் சொல்லி கொண்டே போகிறது. தான் எடுத்துகொண்ட கதையை ஒரு சிறந்த திரைகதை மூலமாக மிக ஆழமாக செதுக்கி இருக்கிறார் ஷிபானி பதிஜா. வசனமும் அவரே, பல இடங்களில் வசனங்கள் படு ஷார்ப். இயக்கம் கரண்ஜோக்கர். தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி சிறப்பாக இயக்கி இருக்கிறார். கண்டிப்பாக சந்தேகமே இல்லாமல் ஷாருக்கிற்க்கு இந்த படம் ஒரு மைல் கல்.